Thursday, 10 March 2011

இரவு உணவுகள்...

இலைகளுதிர்ந்த கொடியைப்போல சிவப்பு
விரிகோடுகள் உங்கள் கருவிழிகளை 
பிணைத்திருப்பது நேற்றைய மிகு
போதையால் தானிருக்கவேண்டும்
காதலைப்பற்றி யின்றும்
பிதற்றிக் கொண்டிருப்பது அலுப்பூட்டுகிறது
காதல்கள் கடவுளுக்குரியவை 
அதனைக் கைவிடுமாறு நிர்பந்திக்கிறேன் 
மேலும் நாம் சாத்தான்களின் பிரியமானவர்களாகும்போது
மண்கலயத்தில் தரப்படும் குருதியைச் சுவைக்க நம் நாவுகள்
பழக வேண்டும் 
நானும் நீங்களும் அந்த கொலையை
நேரில் பார்க்காதவரை முறையே
அபயனென்றும் கோழையென்றும் தான்
 நம்பிக் கொண்டிருந்தோம்
அந்தியைக் கவியும் இருள்போல
புணர்வுக்குப் பின்னொரு வெறுமை
எங்கிருந்து படிகிறது நம் மேல்
 புனிதத்தின் விலங்கு நமது எப்பிராயத்தில் பூட்டப்படுகிறது
திரையரங்கில் குழந்தையாக கைவிடப்பட்டவனின்
தேசத்தையும் மொழியையும் தாயின் பெயரால்தானே
அழைக்க வேண்டியுள்ளது
உலகம் இன்றும் வரைபடத்தின் வழிதான்
பயணத் திசையையும் தொலைவையும்
அனுமானித்துக்கொண்டிருக்கிறது
பசும் வெளிகளின் மேல் நகர்ந்து பிழைக்கும்
ஆடு மேய்ப்பவர்களின் நண்பர்களல்லவா நாம்
பின்னேது சுதைவாசம் வீசும்
சிமிட்டிப் சுவர்களுக்குள் அடைபடுகிறோம்
நமக்கான இந்தயிரவை ஊளையிட்டுச் சிதைக்கும்
நாய்களை கல்லால் அடித்து விரட்டுங்கள்
நமது இப்போதைய எதிரி அவைதான்
 மேலும் நண்பரே உங்கள் நடையை துரிதப்படுத்துங்கள்
அந்த பழங்குடி மலைகிராமத்தில்
சுட்ட வள்ளிக் கிழங்குகளும் உடும்பு இறைச்சியும் 
நமக்கான இரவு உணவுகளாக
படைக்கப் படவிருக்கின்றன.     
                                   - ஆர்.ஜெயசரவணன்

No comments:

Post a Comment