Monday, 9 April 2012

பேய்க்கூட்டம்

                                                                               -திருக்குமரேசன்
                         


நேரம் செல்லச் செல்ல மனது படபடக்கத் தொடங்கியிருந்தது.  நள்ளிரவை நெருங்க, நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை காணப் போவதை எண்ணி ஒருபுறம் உற்சாகமாகவும் இருந்தது.

சில வருடங்களாகவே எங்களுக்குள் பேய் பற்றிய கதைகளும், பேய் இருக்கிறதா, இல்லையா என்கிற விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.  எங்களில் கண்ணனுக்கு மட்டும் பேய், பிசாசு மீது அதீத நம்பிக்கை உண்டு.  ஆனால் வினோத் அவனுக்கு நேர் எதிர்.  நானும் லெனினும் மட்டுமே எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற பொதுவான குழப்பத்தைக் கொண்டிருந்தோம்.

இன்று எப்படியும் பேயை நேரில் பார்த்து விடுவது என்று எல்லோரும் தீர்மானமாய் முடிவெடுத்தோம் இரவு பனிரெண்டு மணிக்கு அனைவரும் சந்திப்பதாக, ஏற்கனவே பேசி வைத்திருந்தோம்.  மூங்கிலை இரண்டாய் பிளந்து வரிசையாய் அடுக்கி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த வேலிலியின் படலைத் திறந்து வீட்டிற்கு வெளியே வந்தேன்.

அரை நிலவு பரப்பிக் கொண்டிருந்த வெளிச்சம் போதுமானதாய் இருந்தது.  அதன் உதவியால் ஓரளவிற்குத் தெளிவான காட்சிகளைக் கண்கள் காட்டியது.  இருபுறமும் நீளமாய் செல்லும், ரோட்டோரத்தில் பாலத்தின் இடுப்பு உயர சுவற்றில் நண்பர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.  மெல்ல அவர்களை நோக்கி நடக்கத் துவங்கிய போது, பாலத்தின் அடியிலிருந்து அருவருக்கத்தக்க சாக்கடை நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது.

அங்கிருந்து மூன்றாவது வீட்டில் யாரோ ஒருவர் பெரிதாய் ஏற்படுத்தும் குறட்டை சப்தத்தை தவிர, தெரு நிசப்தமாகவே இருந்தது.  ரோட்டில் இருபுறமும் ஒன்றொன்றாய் சென்று கொண்டிருந்த வாகனங்கள் குறைந்து இப்போது நடமாட்டமே இல்லாமல் இருந்தது.

காற்றின் வேகம் குறைவாகவே இருந்தாலும் மிதமான பனியால் லேசான குளிர் அடித்துக் கொண்டு இருந்தது.  நான் சின்ன வயதில் இருந்தே நிறைய பேய்க்கதைகளை கேட்டிருப்பதால் சிறிய நடுக்கம் இருக்கவே செய்தது.

எனது தாத்தா அவருடைய இளம் வயதில் முன்பு குடியிருந்த கிராமத்தில்லிருந்து அடுத்து உள்ள சற்றே பெரிய ஊரில் ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து விட்டு, அதிகமான நாட்களில் இரவு தாமதமாய் தான் வீட்டிற்கு வருவாராம்.  அதுவரை எனது அப்பத்தா என் அப்பாவையும், சித்தப்பாவையும் தூங்க வைத்துவிட்டு அவருக்காகக் காத்திருக்குமாம்.

ஒருமுறை வேலை முடிந்து அவர் வரும் போது, வழியில் சுடுகாடு அருகே ஒருவர் வெளிக்கு இருப்பது போல் உட்கார்ந்து இருந்து இருக்கிறார்.  அவரைப் பார்த்ததும் அருகில் சைக்கிளை நிறுத்தி ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி, ”யாருய்யா அது, சுடுகாட்டுகிட்ட வந்து இப்புடி ஒக்காந்துருக்கது?’’ என்று கேட்டு இருக்கிறார்.

அந்த ஆள் விருட்டென எழுந்து கண்களை பெரிதாக உருட்டி விழித்திருக்கிறார்.  கண்கள் ஒவ்வொன்றும் ஒரு பணியாரம் அளவிற்கு பெரிதாய் தெரிந்ததாம்.  உடனே அலறியடித்துக் கொண்டே சைக்கிளை அழுத்தி ஓடி வந்துவிட்டாராம்.

அன்றிலிருந்து வேலை முடிவடைய நேரம் தாமதமானால் மறுநாள் காலையில் தான் வருவாராம்.  இதை அப்பத்தா அடிக்கடி சொல்லும்.

சித்தப்பா ஒருநாள் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கருமை தவிர வேறொன்றும் கண்களில் தென்படாத நிலையில், இரண்டு கருப்பு நிற நாய்கள் குறுக்கே ஓடிவந்து சைக்கிளை தள்ளிவிட்டிருக்கின்றன.

கீழே விழுந்து விரெண்டு எழுந்த அவர், ஒடுச்சி, ஒடுச்சி, என்று கத்திக் கொண்டே எழ  நாய்கள் காணாமல் போயிருந்திருக்கிறது.

நடந்த விஷயம் காலையில் தான் எங்களுக்குத் தெரிந்தது.  பதினைந்து இருபது நாட்கள் வரை ஜøரம் வந்து படுத்திருந்தார் சித்தப்பா.  பல இடங்களில் சாமியார்களைப் பார்த்து விபூதிகளை பூசுவதும், தாயத்துக்களை கட்டுவதுமாய் இருந்தார்கள்.

அந்த சமயத்தில் அவர் அருகில் போகவே பயமாய் இருக்கும்.  உடல் மெலிந்து கண்கள் சிவக்க, திண்ணையோரமாய் உட்கார்ந்து இருப்பவரைப் பார்த்தாலே ஓடி விடுவேன்.  ஒரு வழியாக உடல்நிலை சரியாகி சகஜமான பின்புதான் அருகில் போக ஆரம்பித்தேன்.

”டேய், நெஜமா முருகேசு சொன்னானா? இல்ல ஒரு பிட்ட போட்டு எங்களை இங்க ஒக்கார வச்சுருக்கியா?’’ நச்சரிக்கத் தொடங்கியிருந்தேன்.

”பொய் சொல்லிலிட்டு நானும் கூடவே இருப்பேனா? உண்மைதாண்டா.’’ சலிலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான் லெனின்.

பையிலிருந்து எடுத்து பற்ற வைத்த சிகரெட், வினோத் வாயருகே பெரிதும் சிறிதுமாய் சிவப்பாய் மின்னிக் கொண்டு இருந்தது.

என் வீட்டின் மூங்கில் கேட் திறக்கும் சப்தம் கேட்க, வேகமாய் சிகரெட்டை சாக்கடைக்குள் தூக்கி எறிந்தான்.

வெளியில் வந்த அம்மா,

”இன்னம் என்னடா பண்ணிக்கிட்டிருக்க? மணி பன்னண்டரை ஆகப் போவுது, நேரங்கெட்ட நேரத்துல சரியில்லாத ரோட்டுல ஒக்காந்துருக்காம வந்து படு,’’ என்று திட்ட ஆரம்பித்தது.

”நீ போம்மா, நான் வந்து படுக்குறேன்’’ என்று அதை அனுப்பி விட்டு நான்கு பேரும் நேரம் ஆகிவிட்டதை அடுத்து என் வீட்டு வேலிப்படலுக்குள் நுழைந்தோம்.

எனக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருமுறை இரவில்,  தூக்கத்திலிருந்து எழுந்து, லேசாய் சாத்தப்பட்டு இருந்த கதவை திறந்து வெளியே வந்திருக்கிறேன்.  திடுக்கிட்டு எழுந்த அப்பா வேகமாய் பின்னால் வர, நான் சுடுகாடு இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கியிருந்திருக்கிறேன்.  அவசரமாய் என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்திருக்கிறார்.

அது முதல் நாலாம் வகுப்பு படிக்கும் வரை அம்மா அதன் சேலை தலைப்பின் ஒரு நுனியை என்னுடைய   அரணாக் கயற்றில் கட்டி அருகில் படுக்க வைத்துக் கொள்ளும்.  தூக்கத்தில் உருண்டால் கூடக் கண்டுபிடித்துவிடும்.

நகரத்திலிருந்து முக்கியமாக  ஏழெட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலையாக இருந்தாலும், என் வீட்டருகே உள்ள அந்த ரோட்டில் தான் நகரின் பிரதான சுடுகாட்டிற்கு போக வேண்டும்.

நிறைய பேர் அந்த வழியில் பேய்களைப் பார்த்ததாக என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.

பேய்க்கதைக் கேட்டு தூங்கச் சென்றிருந்த ஒருநாள், நான் சுவரோரமாய் படுத்திருந்த போது ஜன்னல் வழியாக நீளமான வெள்ளை முடிகளோடு ஊதா நிற கை ஒன்று என்னைப் பிடித்து கழுத்தோடு சேர்ந்து இறுக்க திடுக்கிட்டு கண்விழித்தேன்.  நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது.  கனவு என்பது புலப்பட்ட பிறகுதான் மனதில் சிறிய பயம் கலைந்தது.

இருட்டுக்குள் கைகளால் தடவி அண்ணன் படுத்திருப்பதை உறுதி செய்து கொண்டு, அண்ணனை இறுக்கமாய் அனைத்தவாறு படுத்துக் கொண்டேன்.  அன்றிலிருந்து சுவர் ஓரமாக படுப்பதே இல்லை.

வினோத்திடம் பேய் பற்றி பேசினால், “அட போடா, பேயாவது ஒன்னாவது,’’ என்பான்.

”பேய், சாமினு எதுவுமே இல்லடா, எல்லாமே மனுசனே உருவாக்குனது தான்.  அதெல்லாம் நம்பாதிங்கடா’’ என்று அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவான். ”அப்ப, தெனமும் காலையில பேய்புடிச்ச பொண்ணுகளுக்கு ஜெபம் பண்ணி பேய் வெரட்டுரத டிவியில காட்டுறாங்களே அதெல்லாம் பொய்யா?’’

”ஆமாடா, அது மக்கள ஏமாத்துற வேலை, டாக்டர் காப்பாத்த முடியாதுனு கைய விரிச்சுட்டாரு, ஜெபம் பண்ணுன ஒடனே பொழைச்சிட்டாங்கனு, இஷ்டத்துக்கு கதை வுடுவாங்க, நாமளும் அத வாயப் பொளந்துகிட்டு பார்ப்போம்.’’

எங்களது கேள்விகளுக்கு சற்றும் சளைக்காமல் வினோத் பதில் சொல்லிலிக் கொண்டே இருப்பான்.

”ஒனக்கு நம்பிக்கை இல்லங்கறதுக்காக, பொய் பேசாத, திருவுழா நேரத்துல அருள் வந்துச்சுனா, அவங்க நெருப்புல கூட நடப்பாங்க.  நீ நடந்து பாரு அது சுட்டுப்புடும்.’’

”எப்பவாச்சும் ஒனக்கு சாமி வந்துருக்கா? இல்ல எனக்குதான் வருதா? அதெல்லாம் வெறும் நடிப்புடா.’’

அவன் அதிக வாதத்திறமை கொண்டவன் என்பதாலும் எங்களால் அவன் அளவிற்கு வாதம் செய்ய முடியாது என்பதால் வேறொரு தளத்திற்கு பேச்சை கொண்டு சென்று விடுவோம்.

அவன் சொல்வதை நாங்கள் நம்பவில்லை என்பதை, தான் புரிந்து கொண்டதை, புருவத்தை லேசாக மேலே உயர்த்தி ஒரு பார்வையால் வெளிப்படுத்துவான்.

சமயங்களில் இந்தக் குழப்பம் என்னைப் பெரிதாய் குடையத் தொடங்கியிருந்தது.

”பேய் பார்த்துருக்கியாமா?’’ என்று அம்மாவிடம் அடிக்கடி கேட்க தொடங்கியிருந்தேன்.

”பார்த்துருக்கேன், அத ஏன்டா கேக்குற?’’

”சும்மாதான், அது எப்புடிமா இருக்கும்?’’

”வெள்ளை வெள்ளேர்னு இருக்கும், இப்ப என்னடா ஆச்சு ஒனக்கு?’’

”நான் பேய பார்த்து இல்லல்ல.  அதான் கேட்டேன்.’’

என்னைச் சுற்றியுள்ள பலரும் பேயை பார்த்திருப்பதாக சொல்லிக் கேட்டிருப்பதால் வினோத் பேச்சை நம்பவில்லை.  ஆனாலும் அவனுடைய விவாதங்கள் என் மனதில் சிறிய சந்தேகத்தினை ஏற்படுத்தவே செய்தது.  குழப்பத்தையும் அதிகப்படுத்தியிருந்தது.

முன்னொருமுறை பேய் விரட்டுவதாய் சொல்லி ஒரு நடுத்தர வயது பெண்மணி சாமியாடிக் கொண்டே, எங்கள் வீடு இருக்கும் தூரம் வரை விபூதியை வீசிக் கொண்டே வந்து திரும்பும் போது, அம்மா ஏங்க சின்னப் புள்ளைங்க இருக்கிற எடம், இங்க வந்து வெரட்டி விட்டுட்டு போறீங்க’’ என்று பேச, அந்தப் பெண்மணி இன்னும் கொஞ்சம் தூரம் சென்று விபூதியை வீசிவிட்டு போனாள்.

டேய், வெட்டித்தனமா ஏன்டா கண்ணு முழிச்சிகிட்டு இருக்கீங்க? பேயெல்லாம் ஒன்னும் வராது போய் படுங்கடா, என்னையும் தூங்க விடாம புடிச்சி வச்சுருக்கீங்க வினோத் புலம்பத் தொடங்கினான்.

”முருகேசு பய சொன்னாம்பா, அவன் நைட்டு பார்த்தது பேயிதான்னு அடிச்சு சொன்னான்.  ஒன்னுக்கு இருக்க எந்திருச்சு வந்தப்ப போன வாரம் ஆலங்குடி ரோட்டுல ஆக்சிடென்ட் ஆகி செத்த பழைய இரும்புக்கடை ரத்தினம் வந்தாராம்.  இன்னம் கொஞ்சம் நேரம் இருந்து பார்த்துட்டு போகலான்டா கெஞ்சினான் லெனின்.

”பேசாம வீட்டுக்கு போயிரலான்டா கண்ணனுக்கு பயம் அதிகரித்துக் கொண்டு இருந்தது.”

நேரம் ஒரு மணியை தாண்டியிருக்க தூக்கம் அசத்த தொடங்கியது.

”மூஞ்சி கழுவினா தூக்கம் வராதுடா’’ நான் அழைக்க எல்லோரும் அருகில் இருந்த அடி பம்பில் தண்ணீர் அடித்து முகம் கழுவிக் கொண்டபோது, பைப்ப மோதாம அடிடா.  டங், டங்குன்னு சத்தம் கேக்குது  வினோத் அதட்டினான்.

நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராய் கலையத் தொடங்கினோம்.

பொழுது விடிந்து காலை ஆறு மணி ஆகிவிட்டது என்பதை, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த செல்போன் அலாரம் நினைவு கூர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தது.

தாமதமாக படுத்ததால் சோர்வாய் இருக்க எழ மனமில்லாமல் மெதுவாய் எழுந்து வெளியில் வந்தேன்.

வாசல் தாண்டி ரோட்டோரமாய் இருந்த காவிரி நீர்க்குழாயடில எதிர் வீட்டு சிவகாமி அக்கா, “ராத்திரி பாதி சாமத்துல அந்த அடிபைப்புல தண்ணி அடிக்கிற சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.  நான் எந்திருச்சு வந்து பார்த்தேன், வெள்ளையா ஒரு உருவம் நின்னுச்சுடி, கால் கூட சரியா தெரியல.  எதுக்கும் ராத்திரி நேரத்துல யாரும் வெளியில வராதீங்க’’ என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். 

                                                                                                                                                                                                                            

Wednesday, 20 July 2011

என்னை உரசிச் சென்ற ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துதான் கதை பின்னுகிறேன்-எழுத்தாளர் புதுகை சஞ்சீவி.

கே: உங்கள் இளமை காலங்கள் பற்றி?
ப: சைக்கிளில் தெருத் தெருவாக ஐஸ் விற்றது, பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணி, காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கியது, சைக்கிள் உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனியில் ஹெல்பர் வேலை, சென்னையில் ஹோட்டலில் இலை எடுத்து மேசை துடைத்து, மதுரை உலகனேரி அருணா மெசின்  டூல்ஸ் கம்பெனியில் காண்ட்ராக்ட்  கூலியாள், திருப்பூரில் சாயப்பட்டரைப் பணியால், தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வதற்கு உதவியாள்... இப்படி  இளமைக் காலம் முழுவதும் வறுமைக்கு  பயந்து ஒவ்வொரு வேலைக்காக ஓடிக்கொண்டேயிருந்தேன். ஆறு  மாதம் அல்லது எட்டு மாதம் அவ்வளவு தான். அதற்கு மேல் எந்த வேளையிலும் நீடித்தது இல்லை.

கே: உங்கள் கதைகளில் சிறுவர்களே அதிகம் தென்படுகிறார்களே?
ப: ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவரவர் பால்ய காலத்தை எழுதுவது மிகுந்த விருப்பமானதாய் இருக்கும். என் கதைகளில் வரும் சிறுவர்கள் அனைவரும், ஏதேனும் ஒரு தருணத்தில் என் பல்யதைத் தொட்டவர்களாக இருப்பார்கள்.
கே: அப்படி என்றால் உங்கள் படைப்புகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளதா?
ப: நிச்சயமா. என்னை உரசிச் சென்ற                      
ஏதோ ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு
தான் கதை பின்னத்தொடங்குகிறேன்.
ஆனால், எது உண்மை? எது கற்பனை?
என்று வாசகர் பிரித்தறிய முடியாவண்ணம்,
எல்லாமே உண்மையாய் நடந்திருக்குமோ?
என்று நம்ப வைக்கும் வகையில் கதையை
அமைக்க முயல்கிறேன்.

கே: "ஜாதகம்" கதையில் மூட நம்பிக்கைகள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். சிறு வயதில் அது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா?
ப: சர்ச்சில் 'நன்மை' (பாதிரியார் தரும் அப்பம்) வாங்கும் போது-அது இயேசுவின் திருவுடல் என்று சொல்லப்பட்டதால் - அதை கடித்து தின்றால் அதிலிருந்து ரத்தம் வெளிவரும் என்றும் இயேசுவுக்கு வலிக்கும் என்றும் நம்பியிருக்கிறேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
கே: சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கிறீர்கள். அப்போது எப்படி உணர்வீர்கள்?
ப: என் வளர்ச்சியில் மகிழ்கிற நண்பர்கள் வாழ்த்துவார்கள். மனம்நிறைய உற்சாகமாய் இருக்கும். தொடர்ந்து எழுத வேண்டுமென்ற வேட்கை எழும்.

கே: "வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்" பற்றிச் சொல்லுங்கள்!
ப: காதல் கதிகள், பழி வாங்கும் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்கு கதைகள் என்றெல்லாம் இல்லாமல், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன் அத்தொகுப்பு முழுவதும். இன்றும் நேரில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அவர்களை எல்லாம். என்னில் விடுபட்ட பகுதிகளை மீண்டும் எழுது எழுது என்று தூண்டிக் கொண்டே இருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

கே: அடுத்த தொகுப்பு எப்போது?
ப: கடந்த தொகுப்புக்கு பட்ட கடனையே இன்னும் அடைக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நூலாக வெளியிட நாங்கள்  இருக்கிறோம் என்று உத்திரவாதம்  தரக்கூடிய தமிழ்ச்  சூழல் இருக்கிறதா? ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு வட்டம் இருக்கிறது. அந்த வட்டத்திற்குள் இயங்கும் படைப்பாளிகளே வெளிப்பட முடியும் என்கிற சூழல் அவலமானது. நாமும் ஒரு எழுத்தாளனாய் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற ஆசையில் கடனை உடனை வாங்கி, ஒரு தடவை புத்தகம் போட்டுவிட்டு காணமல் போனவர்கள் எத்தனை பேர். மேடையில் பாடுபவர் பணம் வாங்கிகொண்டு பாடுகிறார். பேச்சாளர் பணம் வாங்கிகொண்டு பேசுகிறார். ஆனால் எழுத்தாளன் மட்டும் பணம் கொடுத்தால் தான் புத்தகம் போட முடிகிறது.
கே: பிரசுரமான ஒருசில கதைகளின் தலைப்புக்கள் தொகுப்பில் மாற்றப்பட்டு உள்ளது பற்றி?
ப: தலைப்பை மட்டுமல்ல, கதைகள் உள்ளேயும் சில வரிகளைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியிருக்கிறேன். கதை பிரசுரமான சில நாட்களுக்குப் பிறகு, அதை சேர்த்திருக்கலாம், இதை தவிர்த்திருக்கலாம் என்றெல்லாம் மனசுக்குள்  தோன்றும். தொகுப்பாக முயற்சிக்கும் போது அதை நிறைவேற்றிக் கொண்டேன்.

கே: இலக்கியம் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது?
ப: எனது இளம் பிராயத்தில் சின்னச் சின்ன  விஷயத்திற்கெல்லாம் பொசுக் போசுகென்று தற்கொலை எண்ணம் தோன்றும். பல முறை தற்கொலைக்கு முயன்று மீண்டிருக்கிறேன். அதனால் இன்று வரை உடல்நல பாதிப்புகள் தொடர்கின்றன. எந்த மனநல மருத்துவரிடமும் கவுன்சிலிங் செல்லாமல், சிகிச்சை எடுக்காமல், அந்த மாதிரி எண்ணங்கள் மாறிப் போனதற்கும் காரணம் இலக்கியம் தான். வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், நெருக்கடிகளை சமாளிக்கவும் நம்பிக்கையோடு வாழவும் கற்றுக்கொடுத்திருக்கிறது இலக்கியம். அது மட்டுமல்ல, வெகுஜன மக்களால் ஒதுக்கப் படுகிற மனிதர்களைக் கூட நேசிக்கவும், மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் பிளவுகள் ஏற்படுவதைக் கண்டு கொதிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறது இலக்கியம்.

கே: சிறுகதைகள் எழுத தூண்டியது எது?
ப: பதின் பருவத்தில் ராஜேஸ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் க்ரைம் நாவல்களை அநியாயத்துக்குப் படிப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நாவல்களைக் கூட படித்து விடுவேன். அதிகம் படிக்கிற எல்லோருக்கும் ஒரு கால கட்டத்தில் எழுத தோன்றுவதைப் போல, எனக்கும் ஆசை. அப்போதிருந்த முன்னோடி எழுத்தாளர்கள் எல்லோரின் நேர்காணல்களையும் ஆவலோடு படிப்பேன். அதிலெல்லாம் நாவல் எழுத வேண்டுமாயின் முதலில் சிறுகதைகளை எழுதிப் பழகுங்கள். எழுதும் முறையையும் நடையையும் வசப்படுத்திக் கொண்டு அப்புறம் நாவல் எழுத தொடங்கலாம் என்று அறிவுரைகள் சொல்வதை கவனித்திருக்கிறேன். அதனால் முதலில் சிறுகதைகள் எழுத முடிவெடுத்தேன்.

கே: க்ரைம் நாவல்கள் அதிகமாய் படித்ததாக சொல்கிறீர்கள். உங்கள் சிறுகதைகளில் அதன் சாயல் தெரியவில்லையே?
ப: ஆரம்பத்தில் நானும் அதே மாதிரியான கதைகளைத் தான் யோசித்து பழகினேன். துண்டு துக்கடா பத்திரிக்கைகளில் என் கதைகளும் வந்திருந்தன. பின்னாட்களில் தமுஎச வின் தொடர்பு கிடைத்த பிறகு மேலாண்மை பொன்னுசாமியின் பூக்காத மாலை சிறுகதை தொகுப்பு படிக்கக் கிடைத்தது. கட்டிலில் படுத்தவாறே படித்துக் கொண்டிருந்தவன் சடாரென எழுந்து உட்கார்ந்து யோசிக்க தொடங்கினேன். என்னுள் வேறொரு வாசலை திறந்து விட்டிருந்தது அத்தொகுப்பு. அதன் பிறகு என் வாசிப்பு பழக்கங்கள் அடியோடு மாறிவிட்டிருந்தது. ச.தமிழ்செல்வன், கந்தர்வன், வண்ணதாசன், வண்ணநிலவன், பெருமாள்முருகன், சுந்தரராமசாமி என்று கொஞ்சம் கொஞ்சமாய் என் பாதையை மாற்றத் தொடங்கினேன். அதுவரை சிற்றிதழ்கள் பற்றி எதுவுமே தெரிந்திராத எனக்கு கவிஞர் மா.காளிதாஸ் சிற்றிதழ்களை அறிமுகப் படுத்தி வாசிப்பு பழக்கத்தை மாற்றினார்.

கே; நல்ல சிறுகதை ஆசிரியராய் பெயர் எடுத்து  விட்டீர்கள். நாவல் எப்போது?
ப: 'வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்' நூல் வெளியிட்டதும் அடுத்தது நாவல் தான் என்று முடிவு செய்திருந்தேன். எனது இளம் பிராய வாழ்க்கை முழுவதும் வழிகளும் குரூரங்களும் ரணங்களும் நிறைந்தவை. உளவியல் ரீதியாக நிறைய பாதிக்கப் பட்டிருந்தேன். அதை மையமாக வைத்து நாவல் எழுத தொடங்கினேன். ஐந்து அத்தியாயங்கள் வரை எழுதிய பிறகு உடல் ரீதியாக சில கோளாறுகள், எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிரமபடுத்தும் வகையில் கண்களில் பிரச்னைகள் வரத் தொடங்கியது. அதனால் எல்லாம் தடைபட்டு விட்டது. உடல் சாதகமாய் மாறும் போது, நிச்சயம் நாவல் வெளிவரும்.

கே:கவிதைகளும் எழுத தொடக்கி விட்டீகளே?
ப:இதற்கும் மேலே சொன்ன காரணம் தான். சிறுகதை, நாவல் என்று பக்கம் பக்கமாய் எழுத உடல் ஒத்துழைக்கத போது, நாலு வரி, பத்து வரியில் முடித்துவிடலாமே என்றெண்ணி கவிதை எழுத தொடங்கினேன். ஆனால் பத்து, இருபது பக்கங்கள் எழுதும் போது படாத சிரமங்களையெல்லாம், நான்கு வரிகளுள் ஒரு விஷத்தை கவிதையாய் சொல்வதற்குப் பட வேண்டியிருக்கிறது.

கே:சிறுகதைகள், கவிதைகள் எது சிறந்தது?
ப:சமூக அநீதிகளை குத்திச் சாய்க்கிற ஆயுதங்களாய்ச் செயல்படுவதில் இரண்டுமே கூர்மையாகவும் பதமாகவும் அதனதன் கடமைகளைச் சரியாய்ச் செய்கின்றன.

கே: சஞ்சீவி தாஸ் என்ற பெயரை புதுகை சஞ்சீவி என்று மாற்றக் காரணம்?
ப: ஆரம்பத்தில் எஸ்.சஞ்சீவி தாஸ் என்கிற பெயரில் தான் எழுத தொடங்கினேன். பிறகு பெயரோடு ஊரைச் செதுக்கலாம? என்று யோசித்தேன். ஒரு நாள் நண்பர்களிடம் அந்த எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். அப்போது எனது நண்பர் ஒருவர் நியுமராலஜி கற்றுக்கொண்டிருந்தார். அவர் உடனே பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு, வெகு நேரத்திற்கு கணக்குப் போட்டுப் பார்த்தார். உங்கள் பிறந்த தேதியைக் கூட்டினால் ஐந்து வருகிறது. நியுமராலஜிப் படி எஸ்.சஞ்சீவி தாஸ் என்பதைக் கூட்டினாலும் ஐந்து வருகிறது. அதனால எஸ்.சஞ்சீவி தாஸ்ங்கிற பேர்ல எழுதுனா டாப்பா வருவீங்க. புதுகை சஞ்சீவிங்கிற பேர கூட்டினா மூணு தான் வருது. 5 -க்கும் 3-க்கும் ஒத்துப் போகாது. அதனால புதுகை சஞ்சீவிங்கிற பேரு வேண்டாம் என்றார். புதுகை சஞ்சீவிண்ணே எழுதிப் பார்ப்போமே என்று வீராப்பு தோன்றியது எனக்கு. அப்படியே தொடர்ந்து விட்டேன்.

கே: நீங்கள் எழுதியவற்றில் எழுதியிருக்க வேண்டாம் என்று பின்னாளில் எண்ணிய படைப்பு உண்டா?

ப: உண்மையை சொல்லனும்னா "குதிரைக் கொம்பு" கதை தான். அந்தக் கதை வெளியானதும் எனக்கு தொடர்ச்சியாய் ஏராளமான போன் கால்கள். அதைப் படித்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஒவ்வொரு எழுத்தாளனும் புதுசா எழுத வரும்போது, அவனை காயடிக்கிற வேலைகள் நெறைய நடக்கும். அதுக்காக வரும் போதே கையில வாளேந்தி, வாங்கடா மோதிப் பாக்கலாம் என்கிற மாதிரி இப்படியொரு படைப்பு தேவையா என்றார். ஆதவன் தீட்சண்யா தொடர்புக் கொண்டு, "உன்னோடு பழகிய உன் நட்பு வட்டாரங்களையே கதா பாத்திரங்களாக்கி அவர்களையேப் பகைத்துக் கொள்கிற மாதிரி, எழுதியிருக்க வேண்டாமே சஞ்சீவி..." என்றார். "இனிமேல் எழுத வேண்டாம்" என்ற அன்பு வேண்டுகோள் விடுத்தார் மேலாண்மை பொன்னுசாமி.
       கோபமாகவும் எதிர்ப்பாகவும் கூட நிறைய பேர் என்னிடம் அக்கதை குறித்து நேரிலும் தொலைபேசியிலும் வாதிட்டார்கள். இன்னொரு பக்கம் அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான ஆதரவுகளையும், புதிய நட்பு வட்டாரங்களையும் தேடிக் கொண்டு வந்திருந்தது அக்கதை.
       சலனங்கள் அடங்கிய பிறகு, என் கோபம் தணிந்திருந்த நிலையில், அக் கதையை எழுதியிருக்க வேண்டாமோ என்று நினைத்திருக்கிறேன்.

கே: தங்கள் இலக்கிய நட்பு வட்டம் பற்றியும், உங்கள் முன்னேற்றத்தில் அவர்களின் பங்கு பற்றியும் கூறுங்கள்?
ப: நான் கொஞ்ச காலம் எழுதாமல் இருக்கிறேன் என்றால், அந்தக் கால கட்டத்தில் என் இலக்கிய நட்பு வட்டாரத்தின் தொடர்புகள் குறைந்திருக்கும். கடிதங்கள் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் நண்பர்களோடு பேசத் தொடங்குகிற நாட்களில் படைப்பின் வெளிப்பாடு அதிகமாய் இருக்கும். காரணம், ஒத்த சிந்தனையிலிருக்கும் நபர்கள் கூட்டாய்ச் சேரும் போது செயல்படுவதற்கான மன உந்து சக்தி கிடைப்பது தான். அது மட்டுமல்ல, எனது நண்பர்கள் படைப்பின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி என்னைச் செதுக்குகிறார்கள். நிறைய இடங்களில் என் கதைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
        அவர்களில் பா.திருச்செந்தாழை, ஸ்ரீ சங்கர், செந்தி, லெஷ்மி சரவணகுமார், விஜய் மகேந்திரன், சுரேஷ் மான்யா, சு.மதியழகன், இதய யேசுராஜ், இரா.பிரபாகர், பாரதி கிருஷ்ணன், யாழி, பிராங்க்ளின் குமார், நாணற் காடன், வெ.சந்திரமோகன், மா.காளிதாஸ், இரா.தனிக்கொடி, தீபம் முது, நாகை ஜவஹர், மணிநாத், ந.பெரியசாமி, ஆர்.ஜெயசரவணன், சூர்யா சுரேஷ், தாண்டவகோன், திருக்குமரேசன், உமாசக்தி என்று நீள்கிறது நட்பு வட்டாரம்.

கே: நவீன இலக்கியம் பற்றி?
ப: வழக்கமான சொல் முறைகளைக் கட்டுடைப்பதும், புதிய கோணத்தில் புதிய புதிய பார்வையைச் செலுத்துவதும், சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதுமான நவீன இலக்கியம் எனக்கு வெகுவாய்ப் பிடிக்கும். ஆனால் புதிதாய் எழுத வருபவர்களில் சிலர், காமத்தையும் அது சார்ந்த குற்றத்தையும் எழுதினாலே, நவீனமாய் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு, காமத்தையும் பாலியலையும் வேண்டுமென்றே வலிய திணிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் வாழ்க்கையை நவீனக் கூறுகளுடன் பதிவு செய்கின்ற 'பெருமாள் முருகன், ஆதவன் தீட்சண்யா' ஆகியோரின் கதைகள் என்னை வெகுவாய்க் கவர்கின்றன.


கே: நவீன இலக்கியம் வாசகர்களிடம் போய்ச் சேர்கிறதா?
ப: எந்த வாசகர்களிடம் என்ற கேள்வி எழுகிறது. வெகுஜன வாசகர்களைக் கேட்கிறீர்களா?
         நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை, என் படைப்பை நீ வாசி, உன் படைப்பை நான் வாசிக்கிறேன் என்பது போன்ற எழுதப் படாத ஒப்பந்தம் இலக்கியவாதிகளிடம் நிலவிக் கொண்டிருக்கிறது.
        மக்களுக்கென எழுதுவதை விட்டு விட்டு இதர படைப்பாளர்களிடம் பெயர் வாங்க வேண்டுமென்ற உந்துதல் நவீவ படைப்பாளர்களிடம் தலை தூக்கி நிற்கிறது. எனக்கும் நவீனம் தெரியும் என்று நிரூபித்து விட்டு, பிறகு வெகுஜன மக்களிடம் போய்ச் சேர ஞானோதயத்தால் எழுத்தில் இறுக்கத்தைத் தலத்திக் கொண்டு வெகுஜனப் பத்திரிக்கைக்குத் திரும்புகிற பல பேரை நான் கவனித்திருக்கிறேன்.

கே: கடவுள் பற்றிக் கூறுங்கள்?
ப: படைப்புகள் மூலமாகவும் சரி, பெரியோர்கள் மூலமாகவும் சரி. பொதுவாக அறிவுரைகள் கூறுபவர்களைக் கண்டால் எல்லோருக்கும் கசக்கும். பிடிக்காது. அதனால் தான் நம் முன்னோர்கள் கூற வேண்டியக் கருத்துக்களை கடவுளின் பெயரால் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக நம் உடம்பில் இயங்கும் பிராண சக்திக்கு இரண்டே வேலைகள் தான். ஒன்று நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துப் பொருட்களை உள் இழுத்துக் கொள்வது, மற்றொன்று அவ்வாறு உள் இழுத்துக் கொள்ள இயலாத கழிவுப் பொருள்களையும், நச்சுப் பொருள்களையும் வெளியேத் தள்ளுவது. ஆனால் இவ்விரண்டு காரியங்களையும் ஒரே நேரத்தில் அதனால் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை தான் அதனால் செய்ய முடியும். வெளித்தள்ளும் காரியம் நிகழும் சமயத்தையே நோய்க்காலம் என்று சொல்கிறோம். அந்த நோய்க்காலம் நீண்டு கொண்டே போகாமல், சுருக்கமாக அமைய வேண்டும் என்று விரும்பினால், வெளித்தள்ளும் வேலையைத் தவிர, உள் இழுக்கும் வேலையை நம் பிராண சக்திக்கு நாம் கொடுக்கக் கூடாது. அதாவது நாம் விரைவில் நோய்த் நீங்கி குணம் அடைய, உணவு அருந்தக் கூடாது என்று இயற்கை வைத்தியம் சொல்கிறது.
          இப்படியெல்லாம் உண்ணாவிரதத்தின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் சொல்லி நம் மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பது கடினம் என்று நினைத்தோ என்னவோ, கடவுளின், பெயரால் வாரக் கணக்கில் விரதங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்.
          அது மட்டுமல்ல. இருக்கும் அத்தனை மரங்களிலும் அதிகமான ஆக்சிஜனை வெளியிடுவது ஆலமரமும் வேப்ப மரமும் தான். அந்த மரங்களுக்கு கீழே அரை மணி நேரம் நின்றாலே, உடல் புத்துணர்ச்சி பெரும். அதனால் அம்மரங்களுக்கு கீழ் பிள்ளையாரை உட்க்கார வைத்து, மக்களை சாமி கும்பிட அனுப்பியிருக்கிறார்கள். மிகக் குறைந்த ஆக்ஸிஜனும் அதிகளவில் கரியமில வாயுவையும் வெளியிடுகின்ற புளிய மரத்தில், பேய் இருக்கிறதென்று சொல்லிவிட்டார்கள்.
          இன்னொரு விஷயம், மூளையை புத்துணர்ச்சியாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்துக் கொள்வதற்கான யோகப் பயிற்சிகளை இப்போது அமெரிக்காவில் காசை வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கிறார்கள். அது வேறொன்றும் இல்லை. நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்து, நம் ஆட்கள் காலம் காலமாய்க் கடைப்பிடிப்பது தான்.
          கைகளை மாற்றி தலையின் இருபுறமும் பனிரெண்டு முறை கொட்டிக் கொள்வது. பின் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுவது. இதைத் தான் பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நம் ஆட்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள். சரியாக படிக்காத மாணவனை தோப்புக்கரணம் போடச் சொல்வதும் மூளைக்கான யோக தான்.
          இப்படி நமக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் சாமியின் பெயராலும், கடவுளின் பெயராலும் சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டுமானாலும், என்னால் முடியும், நான் ஜெயிப்பேன் என்று நம்பினால், நிச்சயமாய் அந்த நம்பிக்கையே மன உந்து சக்தியைக் கொடுத்து வெற்றிக்காக உழைக்கவும், அதை நோக்கி நகர்த்தவும் செய்யும். இதையெல்லாம் ஏன் மக்கள்கிட்ட சொல்லிக்கிட்டு... சாமிய. அது குடுக்கும்னு சுலபமா சொல்லி வச்சுட்டாங்க.

Sunday, 17 July 2011

பிழைத்தல்

                                                                                                                      -புதுகை சஞ்சீவி

    மிகுந்த களைப்பும், வேலை தேடிப்போகிற ஆவலுமாக, அந்தப் பேருந்து நிலையத்தில், நான் இறங்கியபோது, ஊரெங்கும் மின் விளக்குகள் எரியத் துவங்கியிருந்தன. சற்று தூரத்திலுள்ள உயரமான கட்டிடங்கள், நியான் விளக்குகளில் அழகழகாய்த் தெரிந்தன.

வரிசையாய் நின்ற பேருந்துகளின் இடையில் நடந்தபோது, தோள் பையில் சட்டைத் துணிகளுக்கு நடுவேயிருந்த, இன்லேண்ட் கவரை எடுத்தேன். பொடி கையெழுத்திலிருந்த கண்ணனின் முகவரியையும், டவுன் பஸ் விபரத்தையும் மனதுள் குறித்துக் கொண்டேன். ஒரு தடவை வந்து பார்த்துப்போகச் சொல்லி எத்தனை கடிதம் எழுதிவிட்டான். ஒரு வேலை தேடிக்கொண்டு இங்கேயே தங்கப்போகிறேன் என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷப் படுவான்.

 கண்ணனைப் பார்க்க மனசு பரபரத்தது. அவன் எப்படியும் ஒரு வேலை வாங்கிக்கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கை மனசெங்கும் வியாபித்துக் கிடந்தது.

வருமானமில்லாத காரணத்தால் ஊரில் எத்தனை அவமானங்கள். இளக்காரப் பார்வைகள். ஏளனப் பேச்சுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, கீதாவைப் பெண் கேட்டுப்போனபோது, நேருக்கு நேராய், தயவு தாட்சண்யம் இல்லாமல் அத்தை வீசிய வார்த்தைக் கங்குகள்.

ஓட்டுனர் உட்கார்ந்து இன்ஜினை உயிர்ப்பிக்க, பஸ் குலுங்கியது. புறப்படப்போகும் சமிக்ஞைக்காக, அவர் ஒலிப்பானை விட்டுவிட்டு அழுத்த, வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த சிலர், சத்தம் கேட்டு வேகமாய் ஏறினார்கள்.

அகலப் சாலையில் மேற்கு நோக்கி ஓடிய பேருந்து, ஏதோ நிறுத்தத்தில் சிலரை உதிர்த்துவிட்டு, மூச்சிரைத்து புறப்பட்டபோது, “இறங்க வேண்டிய ஸ்டாப் இதுவாக இருக்குமோ?” என்ற சந்தேகம் எழுந்தது. ஊரின் பிரம் மாண்டத்தில் சரியான இடத்தில் இறங்க வேண்டுமென்ற பதைப்பும் வந்தது.

அருகில் மிலிட்டரி கவர் சூட்கேஸை, கால்களின் நடுவில் அணைத்து கம்பியைப் பிடித்து நின்றார் ஓர் வெள்ளைச் சட்டைக்காரர். ‘இவரும் வேலை தேடிவந்த வராக இருக்குமோ?’ என்று மனசுக்குள் தோன்றியது. “சார்...” என்று பவ்யமாய் அழைத்தேன்.

ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவர் “ஆங்...” என்றவாறு உணர்வுக்கு வந்தார். இறங்க வேண்டிய நிறுத்தத்தைச் சொல்லி, “அந்த எடம் வந்ததும் சொல்றீங்களா?” என்றேன். “ம்...” என்று அலுங்காமல் தலையசைத்தார்.

அதற்குப் பிறகு ஏதேனும் நிறுத்தத்தில் அவசரமாக சில பயணியர் இறங்கிய போதெல்லாம், வெள்ளைச் சட்டைக்காரரின் முகத்தையே கூர்ந்து பார்ப்பேன்.

அவர் தன் போக்கில் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென என் பார்வையைப் புரிந்துகொண்டவராக, “இது இல்லெ...” என்று உதடு பிரியாமல் சொல்வார்.

இப்படியே சில நிறுத்தங்களைக் கடந்து, பஸ் வேக மெடுத்த நேரம், என் வலது தோளில் கை வைத்து, அழுத்தியபடி சொன்னார், “வர்ற ஸ்டாப்ல எறங்குங்க...”

ஊரிலிருந்த போது ஓர் திரைப்படத்தின் மாலைக் காட்சியைப் பார்த்துவிட்டு, சைக்கிளில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் தான், முதன் முதலாய் அவன் சொன்னான், “நா, ஒரு பொண்ணக் காதலிக்கிறேண்டா...”

மிகுந்த சந்தோஷத்தில் கேலியும் கிண்டலுமாய், அவனை உற்சாகப்படுத்தினேன்.

கடைசியாக அவனைப் பார்த்தபோது, இரவில் மௌனமாய்க் கிடந்த எங்கள் வீட்டு வாசலில் நின்று “ரெண்டு நாள்ல வெளியூருக்கு, வேலைக்குப் போகலாம்னு இருக்கேண்டா...” என்று சுரத்தில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த வார இறுதியில், கண்ணன் அவளுடன் ஓடிய விஷயம், ஊரில் அவனைத் தெரிந்த எல்லோருக்கும், முதலில் ரகசியமாய் பரவி, பிறகு பகிரங்கமாய் கொஞ்ச நாட்களுக்கு அதையே பேசித் திரிந்தார்கள்.

பேருந்திலிருந்து இறங்கியதும், அது புறப்பட்டுப் போவதையே சற்று நேரம் பார்த்து நிற்க, அதிக நெரிசலால் ஒரு பக்கமாய் சாய்ந்தவாறே போய்க் கொண்டிருந்தது.

கடிதத்தில் தெரிந்து வைத்திருந்த தகவல் நினைவில் வர, பஸ் போன திசையிலேயே மெல்ல நடக்கத் துவங்கினேன்.

சாலையில் ஏகப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ‘ஹெட்லைட்’ வெளிச்சத்தில், விர்விர்ரென சீறிக் கொண்டு செல்வதைக் கண்டதும், “இது பணம் பெருத்த ஊரு” என்று கண்ணன், முன்பொரு முறை சொன்னது ஞாபகத்தில் வந்தது.

சில வருடங்களுக்கு முன்பு, அவன் இங்கே வந்து ஏதோ ஒரு கம்பெனியில் ஆறு மாதம் வேலை பார்த்து விட்டு, ஊருக்குத் திரும்பியதிலிருந்து அடிக்கடி சொல்வான், “அந்த ஊருக்குப் போனா, தாயில்லாப் புள்ளயும் பொழச்சுக்கும்டா...”

சாலையிலிருந்து கிளையாய் இடது பக்கம் வீதி பிரிந்திருக்க, அதன் முக்கத்தில், கண்ணாடிகளால் அலங்கரிப்பட்டிருந்த இனிப்பகக் கடையைப் பார்த்தேன். ஐம்பது ரூபாயின் முக்கால் பகுதிக்கு மிக்சரும், மைசூர் பாக்கும் வாங்கிக்கொண்டு, “இங்கன வருசயா தள்ளு வண்டியில இட்லி சுட்டு விப்பாங்களாமே... எங்கனன்னுத் தெரியுமா?” என்று விசாரித்தேன். கடைக்கார இளைஞர், கை நீட்டிய திசையில் நடக்கத் துவங்கினேன்.

சற்று தூரத்திலேயே கண்கள் பரபரவென தள்ளு வண்டிகளைத்தேட ஆரம்பித்தது. சாலையின் இடது ஓரம், பிளாட்பாரத்தில் வடக்குப் பார்த்த முகமாக, நான் கைந்து தள்ளுவண்டிகள், பெட்ரோமாஸ் வெளிச்சத்தில் வரவேற்றது. கண்ணனை நெருங்கிவிட்ட ஆவலில், நரம்புகளுள் ஓர் துள்ளல்.

சாலையில் போவோரை ஈர்க்கும் விதமாக, முதல் வண்டியில், கத்தரிக்காய் அளவு வெளிர் பச்சை குடை மிளகாய்களை, சணலில் மாலையாகக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். வண்டிக்கு முன்பாக சிதறி நின்று வட்டமான பிளாஸ்டிக் தட்டுகளை, இடக் கைகளில் ஏந்தி யிருந்த சிலர், வடையையோ, பஜ்ஜியையோ, சட்னியில் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நரைத்த மீசையிலிருந்த, அந்தக் கடைக்காரரின் முகம் கண்ணன் முகமில்லை.

உட்கார்ந்து சாப்பிடுவதற்காக நான்கைந்து பிளாஸ்டிக் ஸ்டூல்களைப்போட்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்த, இரண்டாம் வண்டியிலும் கண்ணனைக் காணவில்லை.

அவசரமும், ஆர்வத்தேடலுமாய், மூன்றாம் வண்டிக்கு நகர்ந்த போது, அதில் விளக்கெரியவில்லை. ஓர் பெண் மங்கிய வெளிச்சத்தில் நின்று, வண்டியின் மூலையில், அடுப்பு மேலிருந்த இட்லிச் சட்டியில், மாவை ஊற்றிக்கொண்டிருந்தாள். ‘இவள்தான் கண்ணன் பொண்டாட்டியா?’ என்று உற்றுப்பார்த்தேன். அவன் ஊரில் காதலித்துக்கொண்டிருந்தபோது, இரண்டொரு முறை காண்பித்திருக்கிறான். மனதின் ஆழத்தில் புதைந்திருந்த, அவளின் முகத்தை ஞாபகப்படுத்தி, இவளின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன்.

நிறைய வேறுபாடுகள் தெரிந்தாலும், ஏதோ ஒரு சாயல் ஒத்துப்போக, அவள்தான் என்று மனம் ஊர்ஜிதப்படுத்தியது. அவள் என்னைக் கவனிக்காமல், வேலையில் மும்முரமாய் இருக்க, வண்டியை நெருங் கினேன்.

தள்ளு வண்டி சக்கரத்திற்கு அருகில், குத்துக்காலிட்டு உட்கார்ந்து, முதுகைக் காண்பித்தவாறு ஏதோ செய்துகொண்டிருந்தவனை, அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சந்தோஷத்தில், நடையில் ஓர் மிடுக்கு வர, புன்முறுவலுடன் அவனருகில் நின்ற போது, கழுத்தைத் திருப்பி ஏறிட்டுப் பார்த்தான்.

மறுகணம், என் பெயரைக் கூவிக்கொண்டே, ஸ்பிரிங் போல துள்ளி எழுந்து, இறுகக் கட்டிப் பிடித்தான். அவளும் சட்டென மலர்ந்து “வாங்கண்ணா...” என்று பிரியமாக அழைத்தாள். அந்தச் சூழலில் அவள் குரல் மட்டுமே இனிமையாயிருந்து.

சந்தோஷங்களைப் பரிமாறிக்கொண்டு, நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவன் சொன்னான், “கொஞ்சம் இருடா, லைட்ல மேண்டில் ஒடஞ்சு போச்சு, கட்டிட்டு வந்தர்றேன்...” உட்கார்ந்து மேண்டிலைக் கையிலெடுத்தான்.

தள்ளு வண்டிகளுக்குப் பின்னால், நீள காம் பவுண்டுச் சுவரை ஒட்டி, குப்பைகள் இடுப்பு உயரத்திற்கு விரிந்து கிடந்தன. எல்லா வண்டிகளிலும் கை, தட்டு, கழுவுகிற தண்ணீர் நெளிந்தோடி, ஒன்றாய்த் தேங்கி துர்நாற்றம் வீசியது.

கண்ணன் மேண்டில் கட்டுவதை பாதியில் விட்டுவிட்டு, இடையிடையே எழுந்து, வட்டமான உள்ளங்கை அகல சில்வர் தட்டால், தோசைக்கல் மீது, வெந்து சிவந்திருந்த கறியை புரட்டி வழித்துக்குவித்தான். பிறகு, வண்டிக்குக் கீழ்தட்டிலிருந்த அலுமினிய தேக்சாவிலிருந்து, சிறிய கிண்ணத்தில் குழம்பு மொண்டு, கறியின் மேல் ஊற்றி, திரும்பவும் பரப்பிவிட்டான்.

“இது சிக்கனா? மட்டனா?” என்று நான் சந்தேகமாய்க் கேட்டபோது, குறும்பாகச் சிரித்தான். “அதல்லாம் வித்தாக் கட்டுபடியாகுமா? பீப்ஃபுடா...” என்றான்.

கண்ணனின் அப்பா நான்கைந்து பேரோடு, அவள் வீட்டிற்குப் போய் சண்டையிட்டது-அவருக்கு இன்னும் கோபம் குறையாமல் இருப்பது-இவன் அம்மா இவனைப் பற்றியே கவலைப்படுவது-என்று வெகு நேரம் அவன் வீட்டுக் கதைகளைப் பற்றி, சொல்லிக் கொண்டேயிருந்தேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வியாபாரம் செய்துகொண்டிருந்தவன், ஊரடங்கிய நேரத்தில், இருளுக்குள் விழுந்து கிடந்த சந்து வழியாக, வண்டியைத் தள்ளிக்கொண்டு வீட்டுக்குக் கூட்டிப்போனான்.

அந்தச் சிறிய அறையில், பிளாஸ்டிக் குடங்கள், இட்லி சட்டி, ஸ்டவ் அடுப்பு, கிரைண்டர்கள் என பாதி இடம் அடைபட்டிருந்தது.

சிமிண்ட்டுத் தரையில் அழுக்குத் துண்டு விரித்து, என்னைப் படுக்கச் சொல்லி விளக்கை அணைத்தான். விடிவிளக்கு இல்லாததால், கரேலென்ற இருட்டு. கிழக்கில் தலை வைத்து, சுவரை ஒட்டிப் படுத்தேன். கண்ணன் ஒரு பழைய சேலையை விரித்து அருகில் படுத்தான். அவன் மார்புக்கு நேர்தலை வைத்து, வடக்கே கால் நீட்டி, குறுக்காகப் படுத்தாள் அவள்.

விரித்திருந்த துண்டு நீளம் போதாமல், தரையின் குளிர்ச்சியால் கால்கள் சில்லிட்டன. இப்போது குளிர் அதிகமாகி, உடல் வெடவெடத்தது. ‘என்ன வேலை கிடைக்குமோ?’ என்ற பயம் சூன்யமாய் மிரட்டியது. புறப்பட்டபோது, போனில் அழுது கதறிய கீதா, நினைவில் வந்தாள். விடிய விடிய சிள் வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டுக்கொண்டும், கொசுக்களை அடித்தவாறும், புரண்டு புரண்டு படுத்திருந்தேன்.

வெயில் வந்து நீண்ட நேரம் கழித்த பின் எழுந்து, சுவரில் சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தேன். கண்ணன் இரவு விரித்துப்படுத்திருந்த சேலை, சுருண்டு விலகியிருக்க, வெறும் தரையில் குப்புறப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவளைக் காணவில்லை.

வாசலில் நெளி நெளியாய் சிறிய கோலம். கொஞ்சம் தள்ளியிருந்த வேலைக்கருவை மரத்தடியில், தாயும் குட்டியுமாய் நான்கைந்து வெள்ளாடுகள் நின்று கொண்டிருந்தன. கிளை வழியாக ஊடு பாய்ந்திருந்த வெயில், ஆடுகளின் முதுகில் சித்திரம் வரைந்திருந்தது.

கண்ணன் புரண்டு படுத்தான். இடது கையைத் தலைக்கு மேல் நேராக நீட்டியவாறு, புஜத்தில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

கையில் தூக்குச் சட்டியோடு நுழைந்த அவள், தெத்துப்பல் தெரிய சிரித்து, “எந்திரிச்சிட்டீங்களா, அண்ணா...?” என்றாள்.

புன்னகைத்துத் தலையசைத்தேன். பிறகு, கண்ணனின் தொடையில் ஓங்கி அடித்தவாறு, “என்னடா, இன்னும் தூக்கம் கலையலையா?” என்று அதட்டினேன். அவன் கண்கள் திறக்காமலே புரண்டு படுத்தான்.

“இந்தாங்கண்ணே...” என்றவாறு தம்ளரை அவள் நீட்டியபோது கையில் ஒரேயொரு மெட்டல் வளையல் வெளுத்துத் தெரிந்தது. இட்லிக் கடையில் கை கழுவவோ, தண்ணீர் குடிக்கவோ போட்டிருந்த, தம்ளராக இருக்க வேண்டும். அழுக்கேறி நிறம் மங்கியிருந்தது. வாயருகே கொண்டு போனபோது, பிளாஸ்டிக் நாற்றம் வீசியது.

கண்ணன் எழுந்து இரண்டு தொடைகளிலும், முழங்கைகளை ஊன்றி, தாடைக்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில், அறை வாடகை வண்டி வாடகை என்று பல்வேறு செலவு அயிட்டங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணிக்குப் போன பின்பு சொன்னான்.

“வியாபாரத்துல தெனம் நஷ்டம் வருதுரா. சனி, ஞாயிறு லாபம் கெடைக்குது. மத்த நாள்ல முந்நூறு ரூவா மொதலு போட்டா, எரநூறுக்குத்தான் ஓடுது. நேத்து ஒன்னெயப் பாத்ததுமே அவ சொன்னா. நாம படுற கஷ்டங்கள அண்ணேங்கிட்டச் சொல்லிராதீகன்னு...”

வெகு நேரத்திற்குப் பிறகு, அவள் பச்சை நிற பிளாஸ்டிக், குடத்தில் தண்ணீரோடு நுழைந்து, பழைய இட்லிகளை அடுக்கியிருந்த சட்டிக்கு அருகில் குடத்தை இறக்கியபோது, அவளிடம் கேட்டேன், “மீந்த இட்லியெல்லாம் நட்டம்தானா?”

பட்டென்று சொன்னாள், “நட்டம் இல்லீங்கண்ணா, எல்லாத்தையும் வித்துருவோம்...”

கேள்விக்குறியாய் ஏறிட்டபோது, கண்ணன் சொன்னான், “சாயங்காலம் இட்லி சட்டியில் அடுக்கி சூடு பண்ணிருவோம். சாப்டவர்றவங்களுக்கு புதுசுல ரெண்டு, பழசுல ரெண்டுன்னு கலந்து வச்சிருவோம்.”

அவன் பேச்சை நிறுத்துவதற்குள் அவளின் வார்த்தைகள் அவசரமாய் தொடர்ந்தது, “அண்ணா, இவரு பழய இட்லிய வைக்கவே மாட்டாரு... புது இட்லியாத் தூக்கித் தூக்கி வச்சிருவாரு. நா வச்சுக்குடுக்கயிலதான் கலந்து வச்சுக் குடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, தெருவில் அந்தச் சத்தம் கேட்டது.

டமடமவென்ற சத்தமும், “ஹோய்... ஹோய்...” என்ற கூவலும், ஏதேதோ புரியாத வார்த்தைகளும்...

திரும்பிப் பார்த்தபோது, ரோட்டோரமாக ஓர் கூத்தாடிக் குடும்பம் வித்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

கிழக்கு மேற்காக இருபதடி தூரத்தில் மூங்கில்களைப் பெருக்கல் குறி மாதிரி எதிர் எதிர் திசையில் வைத்து, அதன் மேல் கனமான நைலான் கயிறை இழுத்துக்கட்டியிருந்தார்கள். கயிறின் மீது ஏழெட்டு வயது மதிக்கத்தக்க அழுக்கு சுரிதார் சிறுமி, இயேசுநாதர் போல கைகளை விரித்து, வர்ணம் அடித்த நீள மூங்கிலை, குறுக்காகப் பிடித்தவாறு மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.

சற்று நேரம் வேடிக்கைப் பார்ப்பதில் கவனம் செலுத்தியிருந்த கண்ணன், இடையிடையே என் அம்மாவைப் பற்றியும், கீதாவைப் பற்றியும் விசாரிக்கத் துவங்கினான்.

அம்மாவுக்கு முதுகில் சிறிய கட்டி வந்து, பெரியாஸ் பத்திரியில் அறுவை சிகிக்சை செய்தது-கடன் கொடுத்தவர்கள் கடுமையாய் நடந்துகொள்வது-அத்தை கேவலமாய்ப் பேசியது-எப்படியாவது ஒரு வேலை தேடிக் கொள்’ என்று கீதா அழுது தீர்த்தது-ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இறுதியாய் அவன் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தவாறு கேட்டேன், “இங்கே எனக் கொரு வேல கெடைக்குமாடா?”

அவன் வலது கன்னத்தைச் சொறிந்தவாறு, என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டுச் சொன்னான், “நாந்தான் காதலிச்சத் திமிர்ல, வாழ்க்கையில முன்னேறிக் காட்றேன்னு ஊர்ல சவால் விட்டு வந்துட்டேன். இப்படியே முன்னேறி ஒரு ஓட்டல் வைக்கனும்னு கனவு” என்றவன் பிறகு எதுவும் பேசாமல் அண்ணாந்து பார்த்து நீண்ட யோசனையில் ஆழ்ந்தான்.

வெளியே, வித்தை காட்டி முடித்திருந்த சிறுமி, டோலக்காரனின் உதவியோடு கீழே இறங்கினாள். அலுமினியத் தட்டை கைகளில் ஏந்தி, வேடிக்கை பார்ப்பவர்களிடம் சென்று, முறத்தை புடைப்பதுபோல், தட்டை ஆட்டி ஆட்டிக் காண்பித்தாள்.

அதைப் பார்த்ததும் “அந்த ஊருக்குப் போனா, தாயில்லாப் புள்ளையும் பொழச்சுக்கும்டா...” என்று, கண்ணன் சொன்னது நினைவில் வந்தது.

இப்போது, அதைப்பற்றி அவனிடம் கேட்க வேண்டுமென்று தோன்றினாலும், என் வேலை பற்றிய பயம் சூன்யமாய் இறுக்க அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, 27 April 2011



சாலையோரங்களை அறிந்து 
பள்ளங்களில் தேங்கிக்கிடந்த
நேற்றைய மழையின்  மிச்சம்
கடந்த வாகனத்தின்                                           
சக்கரங்களில் பட்டு
இன்றைக்கானதை எதிரொலிக்க
பதறி எழுந்தவன் 
நனைந்த மூட்டையுடன் 
அடுத்த இடம் நோக்கி
நகர்கிறான்
உறங்கா அவன் விழிகளில் 
கலையமறுக்கிறது துயில் மேகம்.
                                             -யாழி

Thursday, 10 March 2011

இரவு உணவுகள்...

இலைகளுதிர்ந்த கொடியைப்போல சிவப்பு
விரிகோடுகள் உங்கள் கருவிழிகளை 
பிணைத்திருப்பது நேற்றைய மிகு
போதையால் தானிருக்கவேண்டும்
காதலைப்பற்றி யின்றும்
பிதற்றிக் கொண்டிருப்பது அலுப்பூட்டுகிறது
காதல்கள் கடவுளுக்குரியவை 
அதனைக் கைவிடுமாறு நிர்பந்திக்கிறேன் 
மேலும் நாம் சாத்தான்களின் பிரியமானவர்களாகும்போது
மண்கலயத்தில் தரப்படும் குருதியைச் சுவைக்க நம் நாவுகள்
பழக வேண்டும் 
நானும் நீங்களும் அந்த கொலையை
நேரில் பார்க்காதவரை முறையே
அபயனென்றும் கோழையென்றும் தான்
 நம்பிக் கொண்டிருந்தோம்
அந்தியைக் கவியும் இருள்போல
புணர்வுக்குப் பின்னொரு வெறுமை
எங்கிருந்து படிகிறது நம் மேல்
 புனிதத்தின் விலங்கு நமது எப்பிராயத்தில் பூட்டப்படுகிறது
திரையரங்கில் குழந்தையாக கைவிடப்பட்டவனின்
தேசத்தையும் மொழியையும் தாயின் பெயரால்தானே
அழைக்க வேண்டியுள்ளது
உலகம் இன்றும் வரைபடத்தின் வழிதான்
பயணத் திசையையும் தொலைவையும்
அனுமானித்துக்கொண்டிருக்கிறது
பசும் வெளிகளின் மேல் நகர்ந்து பிழைக்கும்
ஆடு மேய்ப்பவர்களின் நண்பர்களல்லவா நாம்
பின்னேது சுதைவாசம் வீசும்
சிமிட்டிப் சுவர்களுக்குள் அடைபடுகிறோம்
நமக்கான இந்தயிரவை ஊளையிட்டுச் சிதைக்கும்
நாய்களை கல்லால் அடித்து விரட்டுங்கள்
நமது இப்போதைய எதிரி அவைதான்
 மேலும் நண்பரே உங்கள் நடையை துரிதப்படுத்துங்கள்
அந்த பழங்குடி மலைகிராமத்தில்
சுட்ட வள்ளிக் கிழங்குகளும் உடும்பு இறைச்சியும் 
நமக்கான இரவு உணவுகளாக
படைக்கப் படவிருக்கின்றன.     
                                   - ஆர்.ஜெயசரவணன்

Tuesday, 8 March 2011

தன்னிலும் பலவீனமான ஒருவனை
நீங்கள் குற்றம் சுமத்துகையில்
அவனுக்கான அவன் வாதங்களை 
உங்கள் குரல் எறும்பின் மீது வைத்த
பனிக்கட்டியாய் அழுத்துகிறது 
அவன் கண்களில் தெரியும் உண்மைகளை
ஒரு தேர்ந்த நடிகனின் பெயரால் 
போலியாக்குகிறீர்கள்
நம்பவைத்துவிடுகிறீர்கள் அவனை 
அவன் கழுகின் சிறகுகளை 
கோழியின் சிறகுகளென
நீங்கள் உதாசீனபடுத்திய அவன் 
கண்ணீர் துளிகளை நான் பருகுகிறேன்
கூர்மையாகிறதென் அழகு.  

                                                  - ஜா.பிராங்க்ளின் குமார்

Saturday, 5 March 2011

நகரத்தின் பிரதான சாலைகளில்
புகைவண்டியென பயணிக்கும் ஊர்திகளில் 
திமிறிக்கொண்டிருந்த காளைகளிடமிருந்து
வெடித்துக் கிளம்பின  மகிழ்ச்சியின் பிரவாகங்கள்
ஒவ்வொரு தலையிலும் பதியனிட்டு
நடப்பட்டிருக்கின்றன
ஒளிரும் நிறத்திலான நம்பிக்கைகள்
இருவிரல் பூஜ்ஜியத்தால்
காற்றில் ஜனித்த சீழ்க்கையொழிகளில் மின்னிக்கொண்டிருந்தன
நாளைய இருத்தல்கள் 
உற்சாக பானத்தில் நனைத்த சொற்களை
பாத சாரிகளிடம் வீசியபடி விகார உருவத்துடன்
பயணிக்கிறார்கள்
யாவருக்குமான ஏணிவலைப்  பின்னல்களிலும் 
பொறிக்கப்படுகின்றன  
புதிய மரபுக் குறியீடுகள் 
காளைத்தோல் போர்த்திய நரியொன்று  
உதடு   பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
இளமைகளின் நீரோட்டத்தை.
                                                   
                                                            - புதுகை சஞ்சீவி